
சென்னை: ‘காசி தமிழ் சங்கமம்’ என்ற பெயரில், கன்னியாகுமரியில் இருந்து சென்னை பெரம்பூர் வழியாக பனாரஸுக்கு புதிய வாராந்திர விரைவு ரயில் டிச.28-ம் தேதி முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கலாச்சார மையங்களாக திகழும் வாராணசிக்கும், தமிழகத்துக்கும் இடையேயான பிணைப்பைப் புதுப்பிக்கும் வகையில், காசி தமிழ் சங்கமத்தின் முதல்கட்ட நிகழ்வு கடந்த ஆண்டு தொடங்கியது. இது தமிழக மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ‘காசி தமிழ் சங்கமம்’ பெயரில் கன்னியாகுமரியில் இருந்து மதுரை, திருச்சி, விழுப்புரம், சென்னை பெரம்பூர் வழியாக பனாரஸுக்கு புதிய வாராந்திர ரயில் டிச.28-ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. இதை முன்னிட்டு, சிறப்பு ரயிலாக இன்று (டிச.17) கன்னியாகுமரியில் இருந்து மாலை 5:30 மணிக்கு புறப்பட்டு, 3-வது நாள் இரவு 11:35 மணிக்கு பனாரஸ் செல்கிறது. இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்