
சென்னை: தமிழகத்தில் 19 சதவீதம் வரை ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த ஆண்டு மழை அதிகமாக இருப்பதால், விவசாயிகளிடம் இருந்து 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்குமாறு மத்திய உணவுத் துறைக்கு தமிழக உணவுத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கடந்த அக். 10-ல் கடிதம் எழுதினார். இதையடுத்து, மத்திய உணவுத் துறை, மத்திய தரக்கட்டுப்பாட்டு அலுவலர்கள் தமிழகத்தில் ஆய்வு நடத்தினர். அவர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில், கொள்முதல் செய்யும் நெல்லின் ஈரப்பதத்தை 17-ல் இருந்து 19 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் சாதாரண, சன்னரக நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலையையும் நிர்ணயித்துள்ளது. அதன்படி, ஈரப்பதம் 17 சதவீதமாக இருந்தால் சாதாரண ரக நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டாலுக்கு ரூ.2,040, சன்ன ரகத்துக்கு ரூ.2,060 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஈரப்பதம் 17-18 சதவீதம் இருந்தால், சாதா ரகத்துக்கு ரூ.2,019.60, சன்ன ரகத்துக்கு 2,039.40 என்றும், ஈரப்பதம்18-19 சதவீதம் இருந்தால், சாதா ரகத்துக்கு ரூ.1,999.20, சன்ன ரகத்துக்கு ரூ.2,018.80 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்