
சென்னை: தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடுகள் 85 சதவீத மக்களுக்கு திருப்தி அளித்துள்ளதாக ஐஏஎன்எஸ் - சி வோட்டர்ஸ் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. தமிழகம், கேரளா, அசாம், மேற்குவங்கம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் கடந்த ஆண்டு நடந்தது. தமிழகத்தில் 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருந்த திமுக, மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு மே 7-ம் தேதி பதவியேற்றார். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, கேரளாவில் பினராயி விஜயன், புதுச்சேரியில் ரங்க சாமி, அசாமில் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் முதல்வராக பொறுப்பேற்றனர்.
இந்த 5 மாநிலங்களின் முதல் வர்களாக பொறுப்பேற்றவர்களின் செயல்பாடுகள் கடந்த ஓராண்டில் எப்படி இருந்தது, மக்கள் மத்தியில் அவர்களின் செயல்பாடுகளுக்கு என்ன மதிப்பு உள்ளது என்பது குறித்து ஐஏஎன்எஸ் - சி வோட்டர்ஸ் நிறுவனம் கருத்துக் கணிப்பு நடத்தியது. அந்த கருத்துக் கணிப்பு தொடர்பாக பல்வேறு தகவல்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் செயல்பாடுகளை பொருத்தவரை 30 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் மிகவும் திருப்தி அளிப்பதாகவும், 51 சதவீதம் பேர் திருப்தி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அதன்படி, 81 சதவீதம் பேருக்கு அரசின் செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாக இருப்பது தெரியவந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்