
சென்னை: தீபாவளியைக் கொண்டாட சொந்தஊர் சென்றவர்களில் பலர் நேற்றுசென்னை திரும்பினர். இதனால்புறவழிச்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீபாவளி பண்டிகையை ஒட்டி அக்.21-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. அன்றைய தினம் முதலே பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலானோர் தங்களது சொந்த ஊர்களை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினர். அவர்கள் அரசுப்பேருந்துகள் மட்டுமின்றி ரயில்கள்,ஆம்னி பேருந்துகள், சொந்த வாகனங்கள் எனப் பல வாகனங்களில் ஊர்களுக்குச் சென்றனர்.
சென்னையில் அரசு பேருந்துகள் 6 முக்கிய இடங்களிலிருந்து இயக்கப்பட்டன. அக்.22-ம் தேதி முக்கியபேருந்து நிலையங்களில் கூட்ட நெரிசல் அதிகமாகக் காணப்பட்டது. இவ்வாறு சென்னையிலிருந்து அக். 21, 22, 23 ஆகிய தேதிகளில் மொத்தமாக இயக்கப்பட்ட 10,325 பேருந்துகளில் 5,63,541 பேர் பயணித்திருந்தனர். இதேபோல் பல்வேறு பகுதிகளிலிருந்து வெவ்வேறு இடங்களுக்கு இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகள் மூலம் பொதுமக்கள் நெரிசலின்றி பயணித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்