
புதுச்சேரிக்கு வருகை தந்திருந்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹால்டர் நேற்று ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் அஸ்வனிகுமார், ஏடிஜிபி ஆனந்தமோகன் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது எஸ்சி, எஸ்டி மக்களுக்கான திட்டங்களை காலதாமதம் இல்லாமல் உடனேநிறைவேற்ற வேண்டும். வன்கொடுமை சட்டத்தின் கீழ் வரும் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கொடாத்தூரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் கடத்தி சென்று தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
தொடர்ந்து, புதுச்சேரியில் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் வசிக்கும் பல்வேறு கிராமங்களுக்கு நேரில் சென்று குறைகளை கேட்டறிந்தார். இறுதியாக ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநருடன் ஆலோசனை செய்தார். அவருடன் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தமிழ்நாடு அலுவலக இயக்குநர் சுனில்குமார் பாபு, முதுநிலை ஆய்வாளர் லிஸ்டர், ஆலோசகர் ராமசாமி ஆகியோரும் இருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்