
தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை ஏமாற்றம் அளித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் மீண்டும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் அடவிநயினார் அணை, ஆய்க்குடியில் தலா 20 மி.மீ. மழை பதிவானது. தென்காசியில் 5.20 மி.மீ., குண்டாறு அணையில் 4 மி.மீ., கருப்பாநதி அணையில் 3 மி.மீ., செங்கோட்டை, சிவகிரியில் தலா 1 மி.மீ. மழை பதிவானது.
குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது. கடனாநதி அணை நீர்மட்டம் 66.10 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 64 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 61.03 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 119.50 அடியாகவும் இருந்தது. மலைப் பகுதியில் பெய்த தொடர் மழையால் குற்றாலம் அருவிகளில் நீர் வரத்து அதிகரித்தது. கரோனா பரவல் குறைந்துள்ளதால் ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் குற்றாலம் அருவிகளில் குளிக்க இன்னும் அனுமதி அளிக்கவில்லை. இதனால் குற்றாலம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்