
கோவை: கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தமுபினின் இதயத்தை துளைத்திருந்த ஆணியை பிரேதப் பரிசோதனையில் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். அவரது உடலில் இருந்து மொத்தம் 7 ஆணிகளை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். கோவை கோட்டைமேட்டில் கடந்த மாதம் 23-ம் தேதி, கார் வெடிப்பு சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின்(25) என்பவர் உயிரிழந்தார். தீயில் கருகி கிடந்த முபினின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் விசாரணையில் தெரியவந்தது: கோட்டைமேட்டில் இருந்து சங்கமேஸ்வரர் கோயில் வழியாக டவுன்ஹால் பேருந்து நிறுத்தம் நோக்கி காரில் புறப்பட்ட முபின், சங்கமேஸ்வரர் கோயில் அருகே சென்றபோது காரை நிறுத்தியுள்ளார். அங்கிருந்து 80 மீட்டர் தூரத்தில் உள்ள டவுன்ஹால் பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள புறக்காவல் நிலையத்தில் போலீஸார் இருப்பதை பார்த்ததும் காரில் இருந்த காஸ் சிலிண்டரை வெடிக்கச் செய்துவிட்டு தப்பும்போது முபினும் சிக்கி உயிரிழந்தார் எனத் தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்