
செங்கை/காஞ்சி/திருவள்ளூர்: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 135 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏரிகள், நேற்றைய காலை 6 மணி நிலவரப்படி 31 ஏரிகள் நூறு சதவீதம் நிரம்பியுள்ளன. மேலும், 37 ஏரிகள் 76 சதவீதமும் 143 ஏரிகள் 50-ல் இருந்து 75 சதவீதமும், 326 ஏரிகள் 26 முதல் 50 சதவீதமும் 373 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால், பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்து வாயலூர், வல்லிபுரம் மற்றும் பழையசீவரம் ஆகிய பகுதிகளில் உள்ள பாலாற்று தடுப்பணைகள் நிரம்பி, உபரிநீர் வெளியேறி வருகிறது.
மின் கம்பங்கள் சாய்ந்தன: செங்கல்பட்டு மாவட்டத்தில் கடலோர பகுதிகளான மாமல்லபுரம், கல்பாக்கம், கூவத்தூர், கேளம்பாக்கம், திருப்போரூர், மதுராந்தகம், செய்யூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழையால், சாலைகளிலும் தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது. பலத்த காற்றுடன் மிதமான மழைபெய்ததால், மதுராந்தகத்தை அடுத்த அரியலூர் கிராமத்தில் சேதமடைந்த நிலையிலிருந்த மின்கம்பம் சாய்ந்து விழுந்தது. இதேபோல், செய்யூரிலும் ஒருசில இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. அப்பகுதியில் மின்சார வாரிய பணியாளர்கள் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். செங்கல்பட்டு நகரப்பகுதியில் பெய்த மழையால் ஜிஎஸ்டி சாலையில் மழைநீர் ஆறாக ஓடியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்