
தருமபுரி: வரி குறித்து தமிழக நிதி அமைச்சர் புரிதல் இல்லாமல் பேசி வருகிறார் என தருமபுரியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையம் அருகில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 7) ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையை தொடங்கினார். பின்னர் பாப்பாரப்பட்டியில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் சுப்ரமணிய சிவா நினைவு மணிமண்டப வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாரதமாதா ஆலயத்தில் பாரதமாதாவுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து சுப்ரமணிய அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்தார் பின்னர் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியது: தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் 1923-ம் ஆண்டு சுதந்திர போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா பாரதமாதா ஆலயம் மற்றும் பாரத அன்னை ஆசிரமம் அமைக்க திட்டமிட்டு ஆறு ஏக்கர் நிலத்தை பல சிரமங்களுக்கு இடையில் வாங்கி தன் பெயரில் பத்திரப் பதிவு செய்தார். சிவாவின் மறைவுக்குப் பிறகு அந்த வளாகத்திலேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அந்த வளாகத்தில் தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. பின்னர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அந்த வளாகத்தில் அவரது கனவுப்படி பாரதமாதா ஆலயம் அமைக்கப்பட்டது. ஆனால், இந்த ஆலயத்துக்கு திமுக அரசு பாரதமாதா நினைவாலயம் என பெயர் சூட்டியுள்ளது. இது வருத்தத்திற்குரியது. பாஜகவிடம் ஒப்படைத்தால் கட்சியின் சொந்த செலவில் சிவா கனவு கண்டபடி பாரதமாதா ஆலயத்தையும் பாரத ஆசிரமத்தையும் அமைத்து, தமிழக அரசிடம் ஒப்படைக்க தயாராக உள்ளோம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்